Thursday, December 4, 2008

சட்டக் கல்லூரி மாணவர்களி்ன் பிரச்சினை- புரட்சிகர மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !




சட்டக் கல்லூரி மாணவர்களி்ன் பிரச்சினைக்கு காரணமான
ஆதிக்க சாதிச் சங்கங்களை தடை செய்! புரட்சிகர மாணவர் முன்னணி,
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் !

1-12-2008 காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பிரச்சினைக்கு அங்கு செயல்பட்டு வரும் ஆதிக்கச் சாதி சங்கமே காரணம். எனவே அச்சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புரட்சிகர மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.கடந்த 12/11/2008 அன்று சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதலை அடுத்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கொடூர மனம் படைத்தவர்கள், மனித நேயமற்றவர்கள் என்று கருத்து பரப்பப்பட்டு வருகிறது.இந்த கருத்துக்களின் பின்னணியில் இருப்பது உயர் சாதி வெறியாகும்.சட்டக் கல்லூரியில் 'முக்குலத்தோர் மாணவர் பேரவை'என்ற ஆதிக்கச் சாதி சங்கத்தை நடத்தி வருபவர்கள்தான் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை ஆகிய மூவரும். இவர்கள் கிரிமினல் குற்றப் பின்னனி கொண்டவர்கள்.இவர்களில் பாரதி கண்ணன் மீது மட்டும் 17 புகார்கள் உள்ளன. மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணன் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரிடமிருந்து 3கொடுவாள்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை. 3 மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணன் சிலருடன் சேர்ந்து புரசை சட்டக் கல்லலூரி விடுதிக்குள் புகுந்து சன்னல்,மின் விளக்கு ஆகியவற்றை உடைத்து நொறுக்கியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 30-ல் தேவர் குரு பூஜையின் போது சாதி வெறியை தூண்டும் வகையில் முக்குலத்தோர் மாணவர் பேரவை சார்பாக சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதில் "டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி" என்பதில் 'டாக்டர் அம்பேத்கர்' பெயரை மட்டும் திட்டமிட்டே நீக்கியுள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களை தாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நவம்பர் 3ல் ஒடுக்கப்பட்ட மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்துள்ளனர்.மீறியவர்களைத் தாக்கியுள்ளனர். இதன் உச்சக் கட்டமாக 12-11-2008 அன்று சித்திரைச் செல்வன் என்ற மாணவர் தலையிலும் காதிலும் கத்தியால் தாக்கியுள்னர். இதன் பிறகே ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சாதி ஆதிக்க உணர்வுகள் கல்லூரிக்குள் தலைதூக்கும்போதே தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கல்லூரி நிர்வாகமும் அதைக்கண்டு கொள்ளாமல் இருந்ததுடன் சாதிச் சங்கத்திற்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்கின. இதன் எதிரொலியாகவே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.எனவே மாணவர்கள் நடுவில் மீண்டும் வன்முறை நிகழாமல் இருக்க, சிக்கலுக்குக் காரணமான ஆதிக்க சாதிச் சங்கத்தை தடை செய்ய வேண்டும்; மாணவர் நடுவில் சாதி வெறியைத் தூண்டிய சாதி ஆதிக்க வெறிபிடித்த மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கம் செய்ய வேண்டும்;.கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் அவர்களை மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி (01-12-2008) சென்னை காலை 11 மணியளவில் மெமோரியல் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த தோழர் கபிலன் தலைமை தாங்கினார். சிறப்புரையாக பு.மா.மு. அமைப்பைச் சேர்ந்த தோழர் ராயர், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர். தமிழரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
செய்தி : கபிலன்

No comments: