Tuesday, December 9, 2008

ராஜபக்சே வருகையை கண்டித்து 11 கிராமங்களில் கடையடைப்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர் .

ராஜபக்சே வருகையை கண்டித்து 11 கிராமங்களில் கடையடைப்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
நவம்பர் 12
சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து சத்தியமங்கலம் அருகே 11 கிராமங்களில் புரட்சிகர இளைஞர் முன்னணி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தியது. மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க, இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்றிரவு டெல்லி வந்தார். அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று பொது கடையடைப்பு நடத்த புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து தூக்கநாயக்கன்பாளையம், பங்களாபுதூர், கொங்கல்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர், பள்ளத்தூர், துரையம்பாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், புளியம்பட்டி, ஏழூர் ஆகிய 11 கிராமங்களில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. துரையம்பாளையத்தில் காலையில் சில கடைகள் திறந்திருந்தன. அவற்றை மூடச் சொல்லி புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயி தொழிலாளர் முன்னணி சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தூக்கநாயக்கன்பாளையம் மகளிர் உயர்நிலைப்பள்ளி, பங்களாபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: கபிலன்

No comments: